திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கிருஷ்ணவேணி என்பவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இதேபோல் மீனாட்சி என்பவரும் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணவேணி இரண்டாயிரத்து 387 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதேபோல் மீனாட்சி இரண்டாயிரத்து 162 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் கிருஷ்ணவேணி வெற்றி வேட்பாளராக அறிவிக்காமல், மீனாட்சியை வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.
இது குறித்து கிருஷ்ணவேணி மகன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையின் முன்னணியிலிருந்த தனது தாயாரை விடுத்து குறைவான வாக்குகள் பெற்ற மீனாட்சியை வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது என்றார். இது ஜனநாயக நாடு எனக் கூறிய அவர், ஆளும் கட்சியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கலாமா என ஆவேசமாகக் கேள்வியெழுப்பினார்.
மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் அலுவலர்களிடம் கிருஷ்ணவேணி ஆதரவாளர்கள் நியாயம் கேட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின்னர் சரியாக வாக்குகள் எண்ணப்பட்ட பின்புதான் வெற்றிபெற்ற நபரின் பெயர் அறிவிக்கப்பட்டது என அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடப்போவதாக கிருஷ்ணவேணி தரப்பில் தெரிவித்தனர்.