திண்டுக்கல் மாவட்ட ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 13 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களுக்கு சம்பள பாக்கி வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியரிடம் சென்று இது குறித்து மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச் செயலாளர் கணேசன் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தூய்மை காவலர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கப்பட வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறைந்தபட்சம் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அவர்கள் தங்களது பணியை திறம்பட செய்திட ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இவை அனைத்தும் இவர்களின் அடிப்படைத் தேவைகள், இவற்றை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நிறைவேற்றித் தரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: மாறும் அலுவலர்கள்... மாறாத அடிப்படை வசதிகள்: மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்