நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் இரவு பகல் பாராமல் தன்னலமற்று உழைத்து வருகின்றனர். கரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் தெரியாமல் இருக்கும் மக்களுக்கு குழந்தைகளும் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். தாமாகவே முயற்சி செய்து சினிமா பாடல், வசனம் உள்ளிட்டவற்றின் மூலம் சுட்டிக் குழந்தைகள் செய்யும் விழிப்புணர்வு வீடியோ ரசிக்கும் படியும் உள்ளன.
அண்மையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் போன்று வேடமிட்ட சிறுமியின் வீடியோ சமூகவலைதளத்தை ஆக்கிரமித்தது. அந்த வகையில், காவல் துறையினரின் பணிகளைப் பாராட்டும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் குழந்தைகள் ஜனனி, திலீப், யாழினி ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “கரோனா பெருந்தொற்று நமது நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் வேலையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். கரோனாவை விரட்ட நமக்காக அரும்பாடுபடும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் தனித்து வீட்டில் இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாதச் சூழலில் வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து ஒட்டு மொத்தமாக கரோனாவை விரட்டியடிப்போம்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 - இந்தியா - பாகிஸ்தான் மோதல்!