திண்டுக்கல்: பழனி நகராட்சிக்கு உட்பட்ட அடிவாரம் பகுதியில் உள்ளது, குறும்பபட்டி. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் குறும்பபட்டி பகுதியில் உள்ள தெருக்களில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் சர்வ சாதாரணமாக நடந்துசெல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, குறும்பபட்டியில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும்; கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிறுவர்கள் கூச்சலிட்டபடியே நடந்து செல்வதாகவும், இவர்கள் அனைவரும் அப்பகுதியைச்சேர்ந்த சிறுவர்கள் தான் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற காரணங்களால் இரவு 9 மணிக்கு மேல் இப்பகுதி பெண்கள் யாருமே வெளியே செல்வதில்லை என்றும், மீறி சென்றால் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.
பழனியில் கடந்த சில நாட்களாகத் தொடர் திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில நாட்களில் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் நிலையில், பழனி அடிவாரம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரிக்கும். இந்நிலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சிறுவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை - திண்டுக்கல் விரைவு ரயில் இனி செங்கோட்டை வரை இயங்கும்