திண்டுக்கல்: தாமரைப்பாடி அருகே உள்ள கம்மாளபட்டி என்ற இடத்தில் உறவினர்களுக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் குலதெய்வ கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .இந்த விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்த நிலையில் கோவில் அருகே ரயில்வே பணிக்காக தோண்டிய மண் எடுக்கப்பட்ட குட்டை ஒன்று மூடாமல் திறந்த வெளியில் பாதுகாப்பு இன்றி இருந்தது.
இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்நீலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. இந்நிலையில் இன்று காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தாமரைபாடியை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் லத்தீஷ் வினி (9) என்ற சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் சர்வின் வயது (8) என்ற இரு சிறுவர்களும் நீர் சூழ்ந்திருந்த குட்டையின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீரில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சிறுவர்கள் தண்ணீரில் விழுந்ததை சற்று தொலைவில் இருந்து பார்த்த ஒரு சிறுமி உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் நீரில் குதித்து இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பாபிஷேகத்திற்கு வந்த சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:கோழியை கொன்ற நாயால் ஏற்பட்ட தகராறு - தாய் கண் முன்னே மகன் கொலை