மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பெரும்பாலும் பருவ நிலைக்கேற்ப காய்கறிகள், பழ வகைகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பீன்ஸ், அவரை, பூண்டு, ப்ளம்ஸ் உள்ளிட்டவை சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கேரட் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் விளைச்சல் சற்று குறைவாகவே காணப்பட்டது. தற்போது பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேரட் பயிரிடப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு விவசாயத்திற்கு ஏற்ற நல்ல மழை பெய்து உள்ளதால் தற்போது பயிரிடப்பட்ட கேரட் விளைச்சல் நன்றாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரட் தற்போது கிலோவிற்கு ரூ. 50 முதல் ரூ. 60 வரை விவசாயிகள் வெளி ஊர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்களுக்கு பலன் தரக்கூடியதாகவும், உணவு செரிமானம், பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கும் சிறந்த உணவாகவும், கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவினால் சருமத்திற்கு தேவையான பொலிவு மற்றும் சத்தும் கிடைக்கும்.
மேலும் கேரட் ஒரு டாப்ரூட் காய்கறி வகையைச் சேர்ந்தது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கேரட் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.