திண்டுக்கல்: மாநகராட்சியின் 42ஆவது வார்டு மேட்டுப்பட்டி, பேகம்பூர், சவேரியார் பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, நகர துணை கண்காணிப்பாளருக்கு, மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஆய்வாளர் இளஞ்செழியன் உள்பட காவல்துறையினர், 42ஆவது வார்டு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வேளாங்கண்ணி, அவரது மனைவி ஆரோக்கிய மேரி ஆகிய இருவரும் அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 4.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீன் பிடிப்பதில் தகராறு - தீ வைத்து வாகனங்கள் நாசம்