திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் அனில்குமார் என்ற விசுவலிங்கம்(50). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், அபிசேக் (17), அபிலாஷ் (15) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் நகர் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இவர் நேற்று காலையில் வீட்டைவிட்டு வெளியே வந்த நிலையில், பேருந்து நிலையம் எதிரே உள்ள திருமண மஹால் அருகே தலை மற்றும் நெற்றியில் பீர் பாட்டில் மற்றும் கற்களால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் அனில்குமார் உடலை கைப்பற்றினர். மேலும் இச்சம்பவம் குறித்து அவரின் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து ரூபி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஓடத் துவங்கி, பேருந்து நிலையம் 7 ரோடு சந்திப்பு வழியாக கோக்கர்ஸ்வால்க் பகுதிக்கு சென்று நின்றது. இதனை அடுத்து தடயவியல் நிபுணர் ராஜேஷ், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தார். பரபரப்பான பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த பயங்கரக் கொலை குறித்து டிஎஸ்பி உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் சந்தேகத்தின் அடிப்படையில்சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தின் மிக அருகில் உள்ள மதுபானக் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பாம்பார்புரம் பகுதியை சேர்ந்த ஆரிப்ஜான்(35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் எதிரே நடந்த கொலை சம்பவம் கொடைக்கானல் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.