திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திலிருந்து ஏஎம்சி சாலை வழியாக மணிக்கூண்டுப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் புத்தாண்டு கேளிக்கைகள் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு 10:30 மணியளவில் ஏஎம்சி சாலை ஸ்டாலின் காட்டேஜ் அருகே மதுபோதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். தீப்பற்றி எரிந்ததைக்கண்டு சாலையில் நடந்துச் சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், அக்கம் பக்கத்தில் கடைகளில் இருந்தவர்களும் தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.
அந்த வாலிபர் எரிந்த நிலையில் அங்குமிங்குமாக ஓடி சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இதில், அந்த வாலிபர் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து தீயில் கருகி உயிருக்கு போராடிய நபரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், தீக்காயம் அடைந்தவர் திண்டுக்கல் ஆர் எம் காலனியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது. சதீஷ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த மர்ம நபர் யார், எதற்காக இந்த இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சதீஷ் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில், மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சதீஷ் என்ற வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில், திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள
எரும நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சரவணக்குமார் அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது கொடுக்கல், வாங்கல் தகராறின் காரணமாக இருவரும் சேர்ந்து சதீஷ்குமாரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புது வருடத்தின் முதல் நாளிலேயே வணிக பயன்பாட்டு கேஸ் விலை குறைப்பு!