திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த, காங்கிரஸ் கட்சியின் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரகு வீராரெட்டி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, "நாடாளுமன்றத்தை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவர நினைக்கிறார், மோடி. தொகுதி வரையறைக்கு உட்பட்டு இடஒதுக்கீடு கொண்டு வர தந்திரம் செய்கின்றனர். தென் மாநிலங்கள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையில்லை என நினைக்கின்றனர்.
வட மாநிலங்களான மத்தியப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சிக்கு போதும் என்று நினைக்கிறார்கள். 120 தொகுதிகள் வடமாநிலங்களில் அதிகப்படுத்தி, அதன் மூலம் பலனடைய நினைக்கிறார்கள்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. இதில் பலன் அடையப்போவது உயர்ந்த சாதியினர் மட்டுமே. மகளிர் இடஒதுக்கீடு ஓபிசி, எஸ்சி ஆகிய பிரிவினர் இடம் பெறும் வகையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். அது இல்லாமல் எப்படி இடஒதுக்கீடு கொடுக்க முடியும்? இதை வண்மையாக கண்டிக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது, 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கொடுத்து சாதனை படைத்தது. தென் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை காங்கிரஸ் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "காவரி ஆணையம் உத்தரவினை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறோம். தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க காங்கிரஸ் கட்சி கண்டிப்பான முறையில் போராட்டம் நடத்தும்.
கடந்த காலங்களில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தார்கள். அப்போது அங்கு இருந்த பாரதிய ஜனதா கட்சியினர் போராடியதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக ஆளுங்கட்சியினர் நிறுத்தி விட்டனர். தமிழக காங்கிரஸ் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வேண்டும் என்றுதான் கூறி வருகிறோம்" என கூறினார்.
மேலும், காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர்தான் அரசியல் செய்வதாக தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது என்றும், அதிமுக முதுகெலும்பில்லாத கட்சி என்றும், எதிர்த்து பேச முடியாத கட்சி என்றும் விமர்சித்து பேசினார்.