திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை, தனது குடும்பத்துடன் பழனி முருகனைத் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " நமது நாட்டிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வசதிகள் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் பெறுவதற்கு காரணம், நமது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தான்.
ஸ்டெர்லைட் ஆலையில் இயல்பாகவே ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதி இருந்தும், உற்பத்தி செய்யவிடாமல் அரசியல் செய்கிறார்கள். இவ்விவகாரத்தில் அரசியல்வாதிகள் மிகவும் பிற்போக்குத் தனமாக நடந்து கொள்கிறார்கள்.
தேசிய அவசரம் கருதி ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து. அதேபோல கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தவறான கருத்தைப் பரப்பி பொது மக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்கியதே தடுப்பூசி வீணாகக் காரணம்.
அதிமுக அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது. வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தங்களின் தோல்வியை மறைக்கச் செய்வதாகும்.
அறிவியல் அடிப்படை அறிவு இல்லாத அரசியல்வாதிகள் மக்களுக்கான அரசியல் செய்யாமல் சுய விருப்பு, வெறுப்புகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்" என்றார் அண்ணாமலை.
பழனி கோயிலில் அண்ணாமலை தரிசனம் செய்தபோது, பாஜக இளைஞரணி மாநிலத் தலைவரும், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளருமான வினோஜ் பி.செல்வம் வருகை தந்தார். இரண்டு பாஜக தலைவர்களும் பழனி கோயிலில் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த 2 லட்சம் கரோனா தடுப்பூசி