திண்டுக்கல் (கொடைக்கானல்): தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக 7வது நாளாக நேற்று (செப். 12) கொடைக்கானலுக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, கொடைக்கானல் நாயுடுபுரம் விநாயகர் கோயிலில் இருந்து பேரணியாக கேஆர்ஆர் கலையரங்கம், பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் வந்தடைந்தார்.
அங்கு தனது பிரசார வாகனத்தில் இருந்து உரையாற்றிய அண்ணாமலை, "கொடைக்கானல் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய ஒரு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாகும். ஆனால் இங்கு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அளவில், எந்த ஒரு அடிப்படை வசதியும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. முறையான கார் பார்க்கிங் வசதிகள் இல்லை, சாலை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் நெடுஞ்சாலைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மு.க ஸ்டாலின் கொடைக்கானல் வந்திருந்தார். அப்போது திருட்டுத்தனமாக சென்று பூம்பாறை முருகனை தரிசித்தார். இது உங்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் பூம்பாறை முருகனை தரிசிக்க வந்த அவர், அதை ஒரு சுற்றுலா போல் பயன்படுத்திவிட்டு சென்றார். இவ்வளவு தூரம் திருட்டுத்தனமாக பூம்பாறை முருகனை தரிசிக்க வந்த அவர், சனாதனத்தை வேறருப்பேன் என சொல்வது எந்த வகையில் நியாயமானது.
மேலும் தான் முதலமைச்சராக பதவியேற்றதும், கொடைக்கானலில் பல்நோக்கு மருத்துவமனை, பல அடுக்கு கார் பார்க்கிங் வசதி, ரோப்கார் சேவை, ஆண்கள் அரசு கலைக் கல்லூரி போன்ற திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக கூறி வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றி தரவில்லை. ஆதித்யா L1ஐ செப்டம்பர் 2 ஆம் தேதி அனுப்பினார்கள். இதில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி சோலார் ஆராய்ச்சி மையத்தின் மூலம் சூரியனில் உள்ள கரும்புள்ளியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட போட்டோ முக்கிய பயன்பாட்டில் இடம்பெற்றது.
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசு தான். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 மாநாட்டில் இந்தியாவிற்கு தேவையானவை என்ன என்பதை மையப்படுத்தி உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து மிகச் சிறப்பான மாநாட்டை நடத்தினார். பாரதிய ஜனதா சார்பில் 78 மத்திய அமைச்சர்கள் இருந்தும், இன்று வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் கூட அவர்கள் மீது இல்லை.
இந்திய அளவில் ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர் லாலு பிரசாத் யாதவ், இதில் விஞ்ஞான ஊழலை எப்படி செய்வது என்று கற்றுக் கொடுத்தது திமுக. இந்தியாவிலேயே மதத்தை பிளவுபடுத்தி ஆட்சி செய்பவர் மம்தா பானர்ஜி. இவர்கள் எல்லாம் இணைந்தது தான் மொத்த ஊழல் இந்தியா கூட்டணி. தமிழ்நாட்டையே ஆள தகுதி இல்லாதவர் மு.க ஸ்டாலின், இவரது மகன் மற்றும் மருமகனுக்காக மட்டுமே கட்சி நடத்தும் இவர், இந்தியா கோட்டையில் சென்று என்ன செய்யப் போகிறார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. தினசரி ஒரு அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. ஊழலின் மொத்த உருவமாக திமுக செயல்பட்டு வருகிறது. ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்காகவே தமிழ்நாட்டில் 7 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் தனிநபர் கடன் சுமத்தப்பட்டுள்ளது.
தினசரி மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்காகவே தமிழ்நாடு பெற்ற கடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதை அவரது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனே கூறியுள்ளார். சனாதனம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வாழ்வது, எல்லா காலத்திலும் நிலைத்து நிற்பதே சனாதனம். சனாதனத்திற்கு முடிவும் இல்லை, ஆரம்பமும் இல்லை.
மேலும் சனாதனம் அனைவரையும் ஒன்றிணைத்து சென்றது. இதனை ஆங்கிலேயரும், திமுகவினரும் 70 ஆண்டுகளாக பல்வேறு பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ஆனால் பாஜக ஆட்சியில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மகளிருக்கான கடன் திட்டங்கள் பல்வேறு வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன், தொழில் கடன் என மகளிருக்கான திட்டங்கள் பல லட்சம் பேர் பயன்படும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மீது அனைத்து தரப்பு மக்களுக்கும் முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்கள் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்வார். ஊழல் கூட்டணிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்" என அண்ணாமலை தெரிவித்தார்.