தமிழ்நாட்டில் கடந்த 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உள்பட்ட 137 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக பயோமெட்ரிக் மிஷின் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி தான் கடந்த ஒன்றாம் தேதி முதல் மக்களுக்குத் தேவையான பொருள்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில், பயோமெட்ரிக் மிஷின்களில் இணையதள பிரச்னை உள்ளதால் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்குவதற்கு சுமார் ஒரு மணிநேரம் வரை காலதாமதம் ஆகுவதால் கடை ஊழியர்களுக்கும் மக்களுக்குத் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படுவதாகக் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
எனவே, தமிழ்நாடு பொது விநியோக திட்ட ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பால்ராஜ் தலைமையில் திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், 100க்கும் மேற்பட்டோர் தங்கள் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் மெஷினை திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் விஜயலட்சுமியை முற்றுகையிட்டு மிஷின்களை திருப்பி அளித்தனர்.
இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் நியாயவிலைக் கடை ஊழியர்களை சமரசம் செய்து பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மெஷினில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கடை ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.