திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளங்கி, அட்டுவம்பட்டி, செண்பகனூர், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மலைகிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்துவருகிறது.இங்கு அவரை, முள்ளங்கி, கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.
தற்போது இங்கு அதிகமான பகுதிகளில் பகுதிகளில் பீன்ஸ் பயிரிடப்பட்டு வருகிறது. இது பயிரிட்ட மூன்று மாதத்தில் மகசூல் தரக்கூடியது. மேலும் நல்ல விலையும் கிடைக்கக் கூடியது. இதனால் விவசாயிகள் விரும்பி பீன்ஸ் பயறை பயிரிட்டுவருகின்றனர்.
ஆனால் இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பீன்ஸ் செடி பாத்திகளில் தண்ணீர் தேங்கி, பயிரிடப்பட்ட பீன்ஸ் அழுகி மஞ்சள் கருகல் நோய் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, பீன்ஸ் பயறு நோய் தாக்கம் மற்றும் விலை வீழ்ச்சி பெரும் வேதனை அளிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பீன்ஸ் பயறில் மஞ்சள் நோய் தாக்கத்தை தடுக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆடிப்பட்டம் நெல் விதைப்பு தொடக்கம்!