கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மானுடவியல் படித்து வந்தார். நவம்பர் 9ஆம் தேதி இவர், தனது விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றதன் காரணமாகவே ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது செல்ஃபோன் பதிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு ஐஐடி பேராசிரியரான சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்பது தெரியவந்தது. பேராசிரியரை கண்டித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஃபாத்திமா தற்கொலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பாலபாரதி நமது ஈடிவி பாரத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. ஏனெனில் ஒரு பெண் ’தன்னுடைய பெயரே தனக்கான பிரச்னை’ என்று கூறும் அளவுக்கு இன்றைய சமூகமும் ஆட்சியாளர்களும் அவள் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது நமது சமூகத்திற்கு மிகவும் வெட்கக்கேடானது. அதிலும் ஃபாத்திமாவின் தாயார், ’இந்தியாவின் வேறு மாநிலங்களில் பாதுகாப்பு இல்லாததால்தான் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தோம்’ என்று வேதனை தெரிவித்துள்ளார். ஆனால் இன்றோ அந்த தாய் நம்மீது வைத்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் நாம் தகர்த்துள்ளோம்.
நாம் யாரையோ ஒருவரை கைகாட்டி தப்பித்துக் கொள்ளாமல், அவரின் ஆழ்ந்த துயரத்துக்கு அனைவருமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். முக்கியமாக தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. இந்த மரணத்திற்கு முக்கிய காரணமான பேராசிரியர் சுதர்சன் மீது சட்டரீதியாக கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஏனெனில் ஃபாத்திமாவுக்கு நிகழ்ந்த தொடர் துன்புறுத்தல் காரணமாகவே தற்கொலை முடிவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இந்த அரசின் ஆட்சியில் சிறுபான்மையினர், பட்டியலினத்தினர், பெண்கள் உள்ளிட்டோர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை விடுத்து, ஒரு சாராரின் உடைமையாக்கவே மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. மேலும், மாணவி மரணத்தில் உடனடியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ’ஐஐடி மாணவி இறப்பில் நேர்மையான விசாரணை தேவை’ - முத்தரசன்