திண்டுக்கல்: சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவர் சென்னையில் உள்ள தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில், கன்னியாகுமரியைச் சேர்ந்த சஜின் ராஜ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.
இந்த இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சஜின் ராஜ் தங்களது காதலை தனது பெற்றோருக்கு தெரிவித்து கலைவாணியை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கலைவாணி கருத்தரித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கலைவாணி, சஜின் ராஜிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், சஜின் ராஜ் கருவை கலைத்தால் மட்டுமே தனது வீட்டில் திருமணம் குறித்து பேச முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி கலைவாணி கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், திருமணம் குறித்து சஜின் ராஜ் தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக கூறி கடந்த மாதம் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், கலைவாணி, சஜின் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைவாணி கடந்த மாதம் 11 ஆம் தேதி ராயபுரம் காவல் நிலையத்தில் சஜின் ராஜ் தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார் என புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சஜின் ராஜ் மீது ராயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சஜின் ராஜூக்கு கொடைக்கானலை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதாக கலைவாணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து தனது உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு விரைந்து வந்து மகளிர் காவல் நிலையத்தில் கலைவாணி மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சஜின் ராஜை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சஜின் ராஜ் தான் ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், கலைவாணி ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், கலைவாணியை திருமணம் செய்து கொள்ள வீட்டில் ஏதிர்ப்பு தெரிவித்ததால் அவரை விட்டு விட்டு, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வீட்டில் தன்னை வற்புறுத்தியதால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள தான் சம்மதித்ததாக சஜின் ராஜ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சஜின் ராஜ் மற்றும் கலைவாணி ஆகிய இரு குடும்பத்தினரோடு காவல் ஆய்வாளர் ஜெயராணி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே கலைவாணியை திருமணம் செய்து கொள்வதாக சஜின் ராஜ் தெரிவித்ததை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு காவல் நிலைய வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க: இரவில் சரியாக தூக்கம் வரலையா? - அப்போ இதுவும் கூட ஒரு பிரச்சினையாக இருக்கலாம்..!