தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதிக்கு திண்டுக்கல் வழியாகக் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள், செல்லும் வாகனத்தைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதபடி, வாகனத்தில் உணவுப்பொருள் அவசரம் என எழுதி பயணித்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் பெரிய கடைவீதி, மணிக்கூண்டு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட திண்டுக்கல் நகர் வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் அவ்வழியாக வந்த வாகனத்தைச் சோதனையிட்டனர். இதில், ஏழு மூட்டை, ஏழு அட்டைப் பெட்டிகளில் குட்கா பொருள்கள் கடத்திவந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, குட்கா பொருள்களைக் கடத்திவந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜூபி, கோயம்புத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குட்கா பொருள்களின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. மேலும், குட்கா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்