வானில் நிகழும் அரிய அதிசயங்களில் ஒன்று சூரிய கிரகணம். இது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்தது. பூமியின் துணைக் கோளான நிலவு பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதே போல் சூரியனை பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிலவில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் தருணத்தில் கிரகணம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், கரூர், மதுரை, கோவை, ஊட்டி, திருப்பூர் உட்பட ஒன்பது மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த அரிய நிகழ்வை பொது மக்கள் காணும் வகையில் திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சூரியக் கண்ணாடி, பின்கோல் கேமரா உள்ளிட்ட ஏற்பாடுகள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை தொடங்கிய சூரிய கிரகணம் நண்பகல் 11.15 வரை நீடிக்கும் என கூறப்பட்ட நிலையில் திண்டுக்கல் பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூரிய கிரகணத்தைக் காணவந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் காலை 9.02 மணி அளவில் சூரிய கிரகணம் தெரிய ஆரம்பித்தது.
காலை 9.29 மணி முதல் 9.32 வரை முழு வளைய வடிவிலான முழு சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் எனப் பல தரப்பினரும் கண்டுகளித்தனர். குறிப்பிட்ட நேரப்படி 11.15 மணிக்கு சூரிய கிரகணம் நிகழ்வு நிறைவடைந்தது.
இது குறித்து பார்வையாளர் ஸ்ரீதர் கூறுகையில், ' முதலில் நாங்கள் வந்த பொழுது மேகமூட்டத்துடன் இருந்ததால் இன்று காண முடியாதோ என்று தோன்றியது. பின்னர் 9 மணிக்கு மேலாக மெல்ல மேகமூட்டம் விலகி கிரகணம் தெரியத் தொடங்கியது. மிக அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைக் கண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது' என நெகிழ்வுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நிலத்தகராறில் விவசாயி உயிருடன் எரித்துக் கொலை' - கொலையாளிகள் கைது!