திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் முட்டையுடன் கூடிய இலவச உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பூ மார்க்கெட்டில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியார்களுடன் பேசிய அமைச்சர், ’திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து அம்மா உணவகங்களில் இன்று முதல் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை இலவசமாக முட்டையுடன் கூடிய உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட் அலார்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்து உணவை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாது, அனைத்து வன விலங்குகளையும் கண்காணித்து விலங்குகள் மூலம் கரோனா தொற்று பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வனத்துறையில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்’ தெரிவித்தார்.
இந்நிலையில் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெற்றதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மக்களுக்கு கரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கவேண்டிய அரசே எவ்வித விதிகளையும் கடைபிடிக்காமல் செயல்பட்டுவருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு கரோனா உறுதி!