திண்டுக்கல்: பழனி அருகேயுள்ள செங்கழனி அம்மன் கோயில் வளாகத்தில் இரண்டு பழமையான அரிகண்ட கல் காணப்பட்டது. இது தொடர்பாக பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான நந்திவர்மன் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத் துறை தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறுகையில், “எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும்போது தன் நாட்டுப் படைகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், ஊரை காப்பாற்றுவதற்காகவும், தன்னுடைய தலையை வெட்டி கொற்றவைக்குப் பலி கொடுத்து உயிர் தியாகம் செய்யும் வீரனுக்கு அரிகண்ட சிற்பங்கள் செய்து வழிபடுவது வழக்கம்.
சோழ சாம்ராஜ்யத்தில் வேளக்காரப் படைகளும், பாண்டிய ஆபத்துதவிகள் தனது அரசன் உயிரிழந்ததற்காக தலையை அறுத்து அரிகண்டம் கொடுத்த செய்திகள் கல்வெட்டுக்கள், இலக்கியங்களிலும் பதியப்பட்டிருக்கின்றன.
பழங்காலத்தில் அரிகண்டம் கொடுக்கும் நிகழ்ச்சி பெரிய விழா போலவே நடந்திருக்கிறது. அரிகண்டம் கொடுப்பதற்கு முன்பு உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்பட்டு. அவர்கள் முன்னிலையில் இடையில் உடைவாளும், மார்பில் கவசம் தரித்து போர் வீரன் போல போர்க்கோலம் பூண்டு கொற்றவைக்குப் பூஜை செய்து தனது இடது கையினால் முடியை பிடித்து வலது கையினால் கழுத்தை அறுத்துக்கொண்டு இறப்பது அரிகண்டம் எனப்படும்.
நவகண்டம் எனப்படுவது; உடைவாளில் தனது கை கால் வயிறு என 8 உறுப்புகளை வெட்டிக்கொண்டு ஒன்பதாவதாக தலையை அறுத்துக் கொற்றவைக்கு பலி கொடுத்து இறப்பது நவகண்டம் எனப்படும்.
சிற்பத்தின் அமைப்பு:
முதல் சிற்பம் 45 சென்டிமீட்டர் உயரமும், 30 சென்டி மீட்டர் அகலமும் உள்ள கரணைகல் வடிவிலான கிரானைட் வகை கல்லில் 25 சென்டிமீட்டர் உயரமும் 20 சென்டிமீட்டர் அகலமும் உள்ள அரிகண்ட சிலை புடைப்புக்சிற்பமாக ஐந்து சென்டிமீட்டர் ஆழத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது சிற்பம் 35 சென்டிமீட்டர் உயரமும் 25 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. கல்லில் 5 சென்டிமீட்டர் ஆழத்துக்கு புடைப்புச் சிற்பமாக 20 சென்டிமீட்டர் அகலத்திற்கு 25 சென்டிமீட்டர் உயரத்திற்கும் அரி கண்ட சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இதன் அமைப்பை ஆய்வு செய்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள அரிகண்ட சிற்பங்களில் சிறியது இதுவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது” என்றார்.
வீர தீர செயல் புரிந்தவர்களின் அடையாளம்:
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “சிற்ப அமைதியையும் ஒழுங்கற்ற கரணைகல் வடிவிலான புடைப்பு சிற்பத்தின் உருவ அமைப்பையும் வைத்துப் பார்க்கும்போது இந்த சிற்பங்கள் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும்.
சிற்பங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் காற்று மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அரிகண்ட சிற்பங்கள் செங்கழனி அம்மன் கோயிலை சேர்ந்தவையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
அருகிலுள்ள அழிந்துபோன மிகப் பழமையான தற்போது புதுப்பிக்கப்பட்ட சிவன் கோயிலிலிருந்து கால ஓட்டத்தில் இங்கு கொண்டு வரப்பட்டு செங்கழணி அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
வீர தீர செயல் புரிந்தவர்களின் அடையாளமாகவே அரிகண்ட சிற்பங்கள் கருதப்படுகின்றன. கால வரலாற்றைக் காட்டும் முக்கிய ஆவணங்களாக இந்தச் சிற்பங்கள் விளங்குகின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டு பழமையான முந்தைய மூத்த தேவி சிலை கண்டெடுப்பு!