திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாகவே பகல் இரவு நேரங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தொடர் மழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் மலை கிராமமான பூம்பாறை ,மன்னவனூர், கிளாவரை, பகுதிகளில் விவசாயம் செய்துள்ள கேரட், பூண்டு, பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் மழையில் அழுகி சேதமடைந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். அறுவடை செய்யும் பயிர்களும் சேதம் அடைந்து வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் மழையினால் சேதமடைந்துள்ள விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.