திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தமிழ்நாடு அரசின் ஆவின் தொழிற்கூடம் உள்ளது. இங்கு வெண்ணெய்யை உருக்கி நெய்யாக்குவது, பால் பாக்கெட் தயார் செய்வது போன்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு ஊழியராகப் பணியாற்றிவருகிறார் ஜஸ்டின் திரவியம்.
இவர் நேற்று பணியில் இருந்தபோது வெண்ணெய்யை உருக்கி நெய்யாக மாற்றுமாறு பொது மேலாளர் தினகர பாண்டியன் சொல்லியுள்ளார். ஜஸ்டின் திரவியம் அந்தப் பணியில் ஈடுபட்டபோது பாய்லரில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனைப் பணியிலிருந்த உயர் அலுவலர் பிரேமிடம், ஜஸ்டின் திரவியம் தெரிவித்துவிட்டு பணிமுடிந்து வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
ஆனால் இது தெரியாமல் தினகர பாண்டியன் ஜஸ்டின் திரவியத்தை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இன்று காலை பணிக்குவந்த ஜஸ்டின் திரவியத்திற்கு, தினகர பாண்டியன் திட்டியது தெரியவர ஆவின் தொழில் கூடத்திலேயே நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே சக ஊழியர்கள் அவரை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தற்கொலையில் புதுச்சேரி இரண்டாமிடம்!