வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு சொந்தமான வீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை சேர்த்து 6 குடியிருப்புகள் உள்ளன. முதல் மாடியில் 3 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். கீழே உள்ள மூன்று குடியிருப்புகள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (அக். 23) வீட்டின் பால்கனி மற்றும் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து கீழே இருந்த ஆஸ்பிடாஸ் கூரை மீது விழுந்தது. அப்போது கீழே நடந்து சென்ற விஜயா (வயது 40) என்ற பெண்ணின் தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டின் முன் பகுதியில் இருந்த பால்கனி சுவர் இடிந்து விழுந்ததால் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். பின்னர், வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் மாடியில் சிக்கிய 2 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட 5 பேரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் திடீரென பால்கனி சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:"கர்நாடகா - தமிழக அணைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!