திண்டுக்கல் : வத்தலக்குண்டை சேர்ந்த இம்தா துல்லா (32) என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடை வத்தலகுண்டு பெரியகுளம் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த கடைக்கு நேற்று (செப். 17) இரவு மது அருந்திவிட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கொத்து பரோட்டா கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு மாஸ்டர் கொத்து பரோட்டா இல்லை என தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் பரோட்டா மாஸ்டர் முத்துவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் ஹோட்டலின் சேர், டேபிள் மற்றும் பாத்திரங்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களும் அச்சத்தில் ஹோட்டலை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து பரோட்டா மாஸ்டர் முத்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் கொத்து பரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்டு மாஸ்டரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் சி.சி.டிவியில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளை வைத்து அந்த கும்பலைத் போலீசார் தேடி வருகின்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:Actress Vijayalakshmi Video : நடிகை விஜயலட்சுமி தற்கொலை முடிவு.. புதிய வீடியோ வெளியிட்டு பரபரப்பு!