திண்டுக்கல் மாவட்டம் பழனி வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது, தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். அப்போது எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர் யானை விரட்டியடிப்பது வாடிக்கையாக உள்ளது.
இருப்பினும் விலங்குகள் உணவுக்காக அடிக்கடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. யானைகளால் மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் சேதமடைகின்றன. இதனிடையே பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள தேக்கந் தோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் யானை ஒன்று சுற்றி திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பாதையில் இரவு நேரங்களில் காட்டு யானை உலா வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது, "தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் இரவு நேரங்களில் பொதுமக்கள் மலைப்பாதையில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். யானை நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்!