திண்டுக்கல் அருகே மாலைப்பட்டி காமாட்சிநகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர் தனது கணவருக்கு உதவியாக சோப்பு கம்பெனிக்கு தினமும் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 10) காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்குச் சென்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 23 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 41 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவர் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டை சோதனை செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
காவல் துறையினர் நடத்திய சோதனையில், அடையாளம் தெரியாத கும்பல் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்தது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த ஒரு கண்காணிப்புக் கேமராவை, வேறு திசையில் திருப்பி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.