திண்டுக்கல்: வேடசந்தூர் அடுத்த ஆசாரிப்புதூர் கிராமத்தில் அருகே உள்ள மலைக்குன்றின் மீது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மல்லீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் குன்றிலிருக்கும் பாறைகளில் பழங்கால தமிழ் கல்வெட்டுகளும், கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சின்னங்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் குன்றின் அடிவாரத்தில் நுழைந்தான் பாறை என்னும் சிறுபாறையின் கீழ் கற்காலத்தைச் சேர்ந்த ஒரு ஈமக்கல் திட்டை ஒன்றும் உள்ளது.
அங்குள்ள பாறையின் மேல் 300 ஆண்டுகள் பழமையான கல் ஒன்றில், சூரியன், சந்திரன் உருவமும், அதன் கீழ் சிவலிங்கம் மற்றும் நந்தி உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பாறையின் உச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கள் ஆயுதங்கள், இரும்பை உருக்கிய பாறை கற்களும் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, கோவிலுக்குச் சொந்தமான கிணற்றின் அருகே பழமை வாய்ந்த நீதிபரிபாலன கல்வெட்டும், சங்க காலத்திற்கு முன் இறந்தவர் நினைவாக வைக்கப்படும் கல் குதிர்களும் மலையைச் சுற்றிக் குவியலாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பாறைகளில் ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் இருந்தன.
இதுகுறித்து தகவலறிந்த வரலாற்று ஆய்வாளர்களான விஸ்வநாத தாஸ், சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கல்வெட்டை ஆய்வு செய்த போது அது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தெரியவந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பாறையில் தமிழில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அப்பகுதியில் உள்ள சிற்பங்களையும், கோவில்களையும் தீவிரமாக ஆய்வு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ''கலைஞர் ஆட்சியில் மூடை முடையாக அரிசி பருப்புகளை தூக்கிச் சென்றேன்'' - மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி