திண்டுக்கல்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் ஈரோட்டில் நடந்த ஆசிரியர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்க சென்றனர். மீண்டும் ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மோதிலால் ராஜ் மற்றும் ராபர்ட் ஆகிய இரண்டு ஆசிரியர்களும் பயணித்துள்ளனர். வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி என்னுமிடத்தில் வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் அதிவேகமாக மோதியது.
இதில் கார் சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே விழுந்தது. இந்த விபத்தில் சுரேஷ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அவருடன் பயணித்த மோதிலால் ராஜ் மற்றும் ராபர்ட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் மூவரையும் அவ்வழியாக பயணித்த சிலர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கார் விபத்துக்குள்ளாகும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான மூன்று நபர்களுக்கும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Video: ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு