திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உகார்த்தே நகர் பகுதியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடாந்திர கொடியேற்ற திருவிழா கடந்த செப். 25 ஆம் தேதி இரவு அன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று (செப். 27) அதிகாலை கோயிலின் கதவுகள், உண்டியல் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கபட்டு பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டிருந்த கொடைக்கானல் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணைமேற்கொண்டனர்.
இதில் தேனியைச் சேர்ந்த முத்துக்குமார், கெளதம், சித்தநாயக்கன் பட்டியைச் சேர்ந்த மாதவன் ஆகியோர் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.