கடந்த 5ஆம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அவ்வழியே வந்த சரக்கு இரயில் கற்களில் மோதி காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இது குறித்து திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குழு அமைத்து விசாரித்து வந்தனர். அதில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த 16 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் சிமெண்ட் சிலாப் கற்களை தண்டவாளத்தில் வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு குழு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது பற்றி பேசிய ரயில்வே பாதுகாப்பு படையினர், "இது போன்று அபாயகரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாலகிருஷ்ணாபுரம், அனுமந்த நகர் போன்ற இடங்களில் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.