திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. கணவரை இழந்த காஞ்சனா நெசவு நெய்யும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் பிரதீப். இவர், சின்னாளப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், தாயாரிடம் செல்போன் வாங்கித்தரக் கூறி சண்டையிட்டுள்ளார். இதற்கு அவரது தாய் மறுத்ததால் மாணவன் பிரதீப் கோபித்துக் கொண்டு தனது துணிகளுடன் தனது அண்ணன் செல்போனையும் எடுத்துக்கொண்டு திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், பிரதீப் அவரது நண்பர் மூலமாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். இதனிடையே வீட்டிற்கு வந்ததும் மீண்டும் தாயுடன் சண்டையிட்டுவிட்டு, நேற்று (ஜூலை13) வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்ற பிரதீப் வீடு திரும்பாததால் மாணவனை இரவு முழுவதும் அவரது தாயாரும், உறவினர்களும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காந்திகிராமம் ரயில்வே கேட்டிருக்கும், அம்பாத்துரை ரயில் நிலையத்திற்கும் இடையில் திண்டுக்கல்- மதுரை செல்லக்கூடிய தண்டவாளத்தில் பிரதீப் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத விரக்தி: மாணவி தற்கொலை முயற்சி