தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 23.01.2018 அன்று 4 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில், சிறுமியைக் காணாமல் தேடி அலைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியின் அழுகை சத்தம் கேட்டனர்.
தொடர்ந்து சிறுமியிடம் கேட்டபோது அப்பகுதியை சேர்ந்த இளைஞர் செல்வம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட செல்வத்தையும் நிகழ்விடத்திலே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.26) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் முடிவில் செல்வம் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக செல்வத்திற்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து செல்வம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தருமபுரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: போக்சோ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி