தருமபுரி: கோயில் திருவிழாவின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தால் திருவிழாவை நடத்தாமல் கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ளது பெரியாண்டிச்சியம்மன் கோயில். இந்த கோயிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். காரிமங்கலத்தில் உள்ள ஐயர்கொட்டாய் பகுதியில் உள்ள பங்காளிகளுக்கு சொந்தமான இந்த கோயில் திருவிழாவுக்கு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தும்பளஅள்ளி, முரசுபட்டி, கருப்பாயி கொட்டாய், குட்டகாட்டுர், பேகாரஅள்ளி உள்ளிட்ட 32 கிராமங்களில் இருந்து மக்கள் வந்து திருவிழாவை நடத்துவர்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) இரவு கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் உள்ள பங்காளிகளின் வீடுகளுக்கு சென்று மக்கள் கரகத்தை அழைத்து ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர். திருவிழாவில் வான வேடிக்கைக்காக கிராமத்து இளைஞர்கள் நாட்டு வெடி பட்டாசுகளை அதிகளவு வாங்கி வைத்துள்ளனர். ஊர்வலத்தின் போது அதனை மினி சரக்கு வாகனம் ஒன்றில் வைத்து பட்டாசுகளை வெடித்து கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி மினி சரக்கு வண்டியில் இருந்த சாக்கு மூட்டையின் மீது, எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளது. இதில் சாக்கு மூட்டையில் தீப்பற்றிக் கொண்டது. அந்த தீ மளமளவென சாக்கு முழுவதும் பரவி பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கின. அப்போது வாகனத்தின் அருகே இருந்த விஜயகுமார் (வயது21), பரசுராமன் (20), யாசிகா (6), பிரதிக்க்ஷா (6), தர்ஷன் (5), நாகராஜ் என குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் வெடிவிபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் அவர்கள் கிராம மக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் யாசிகா என்பவர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதில் விஜயகுமார் என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடி பட்டாசுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யார் வெடி வெடித்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் திருவிழாவை நடத்தாமல் கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.