தர்மபுரி: அன்னசாகரம் ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் களிமண், வண்டல் மண் அதிக அளவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு களிமண் எடுக்க அரசு அனுமதியளித்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இந்த ஏரியிலிருந்து களிமண்ணை எடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தினர்.
தற்போது சிலர் எந்தவித அனுமதியும் பெறாமல் ஏரியில் உள்ள மண்ணை இரவு மற்றும் பகல் நேரங்களில் அள்ளி வெளியில் விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர். ஏரியில் மண் அள்ளுவதை அறிந்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக அப்பகுதிக்குச்சென்று ஏரியில் மண்ணள்ளிய மூன்று லாரிகளை பிடித்து அன்னசாகரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்துப்பேசிய அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள், “எங்கள் ஊர் ஏரியில் அனுமதி இல்லாமல் ஒரு சிலர் தொடர்ந்து மண் அள்ளி வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை அள்ளியபோது அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தோம்.
ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏரியில் சுமார் 150 முறைக்கு மேல் லாரிகளில் மண் அள்ளியதால் ஏரியின் தண்ணீர் வரும் முக துவாரப்பகுதி மட்டும் ஆழமாவதால் ஏரியின் கடைசிப்பகுதி மற்றும் மையப்பகுதிக்கு தண்ணீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏரியை சுற்றுப்புறத்தில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமாக ஏரியிலிருந்து மண் அள்ளும் மூன்று லாரிகளைப் பிடித்து வருவாய்த் துறையிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க: ஹோட்டலில் உணவருந்திவிட்டு செல்கையில் பெண்ணிடம் செயின் பறிப்பு - போலீஸ் விசாரணை!