தர்மபுரி: பள்ளி மாணவியுடன் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
பென்னாகரம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று கொள்ள வசதியாக அவரது பெற்றோர் ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கிக் கொடுத்தனர்.
இந்தச் செல்போனில் மாணவி ஃபேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். ஃபேஸ்புக்கில் பாப்பாரப்பட்டியை அடுத்த பாலவாடி கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்பவரது மகன் விக்னேஷ் (22) உடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து விக்னேஷ், பள்ளி மாணவியிடம் தொடர்ந்து பேச மாணவியின் வாட்ஸ்-அப் எண்ணை பெற்று குறுஞ்செய்தி அனுப்பி மாணவியிடம் பழகி வந்துள்ளார்.
மேலும் வீட்டுக்குத் தெரியாமல் பள்ளி மாணவியை வெளியே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விக்னேஸை கண்டித்துள்ளனர்.
இருப்பினும், இதனை பொருட்படுத்தாமல் மாணவியிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அடுத்து பள்ளி மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரையடுத்து காவல் துறையினர் அந்த இளைஞரை பிடித்து, அவரது செல்போனை பரிசோதனை செய்தனர்.
அதில் மாணவியிடம் நெருங்கி பழகிய போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் விக்னேஸை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.