தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிவருபவர் ராஜேஸ்வரி (25). இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்தப் புகார் மனுவில், தான் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவருவதாகவும் தன்னுடன் வங்கியில் பணிபுரியும் ஆனந்தகுமார் என்பவர் தன்னுடன் ஓராண்டு பழகி, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மனு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஆனந்தகுமார் தன்னிடம் ஒரு ஆண்டு பழகிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் அவரது வீட்டில் இருப்பவர்கள் கூறும் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து தான் காதலனிடம் கேட்டதற்கு அவருடைய பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற கூறியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தர்மபுரி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க இருப்பதாகவும் கூறிய ராஜேஷ்வரி, தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!