தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 173 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான ஆணை, 56 பயனாளிகள் மற்றும் 18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியர் மலர்விழி வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், "கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்களின் மூலமாக கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு சுமார் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த மூன்று மாதத்திற்குள் இத்தொகை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும்.
ஊரடங்கால் தனியார் நிதி நிறுவனங்கள், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் முகக்கவசம் தயாரித்தல், கிருமிநாசினி தயாரித்தல், துணிப்பைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட புதிய தொழில்களைத் தொடங்க மகளிர் சுயஉதவிக் குழுவினர் முன்வரவேண்டும்.
பெண்கள் இந்தப் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில் தொடங்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உரிய முறையில் விண்ணப்பித்தால் உடனடியாகக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.