தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகிய இருவரும் தருமபுரி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாடினார்.
அப்போது, கூட்டணி கட்சியான பாமகவின் சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசுக்கு அதிமுகவினர் முழு அளவில் பணியாற்றினர். மற்ற தொகுதிகளைக் காட்டிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார் என்று கூறினார்.
இருப்பினும் கூட்டணி கட்சியினர், ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்துவோம் என்றும், பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.