தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 20 பயனாளிகளுக்கு ரூ.21.47 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் பேசும்போது,
"தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் துறையின்கீழ் இதுவரை 8437 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. மாவட்டத்தில் 169 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. இதில் 274 தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீதம் உள்ள அனைத்து மனுக்களும் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் தணிக்கை, விசாரணை செய்து தகுதியின் அடிப்படையில் தீர்வு காணும் வகையில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தகுதியுடைய அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து விரைவாகத் தீர்வு காண அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தகுதியுடைய மனுக்கள் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தர்மபுரி சார் ஆட்சியர் மு. பிரதாப், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற வெள்ளை மாளிகை.. விரைவில் வரும் தடுப்பூசிகள்!