தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் நேற்று (ஆக. 21) தமிழ் ஆகம பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளரும், இயக்குநருமான கௌதமன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கோயிலில் அர்ச்சனை செய்ய அரசு அனுமதி வழங்கியதை தமிழ் பேரரசு கட்சி சார்பில் வரவேற்கிறோம். அர்ச்சகராக நியமிக்கப்படுபவர்கள் 60 வயதுவரை மட்டுமே பணி செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. அதேபோல் 60 வயதுக்கு மேல் பூஜை செய்யும் பிராமணர்களையும் உள்ளடக்கி வெளியேற்ற வேண்டும்.
அனைத்து சாதியினரும், தமிழர்கள் கட்டிய கோயில்களில் பூஜை செய்ய வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டின்படி பயிற்சி கொடுக்க வேண்டும். பூசாரிகளுக்கு பயிற்சி அளிக்க தனி கல்லூரிகளை உருவாக்க வேண்டும் அல்லது தற்போது உள்ள கல்லூரிகளில் வகுப்பு உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமாகி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அதனை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவற்றை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.