இது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“ வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினர் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் செட்டிகரை, சோலைக்கொட்டாய், அக்கமனஹள்ளி, கோத்து ரெட்டிபட்டி, குப்பூர் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தீவனப் பயிர்களை சேதப்படுத்தியதை அறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
கள ஆய்வின் முடிவில் உள்ளூர் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை வகுத்துள்ளனர். மேலும் தீவனப் பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகள் உள்ளூர் வகை வெட்டுக் கிளி இனத்தை சேர்ந்தது, இது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. இந்த வெட்டுக்கிளிகள் மூன்று பருவத்தை கொண்டது. முட்டை உருவம். குஞ்சு பருவம். முதிர்ந்த பருவம் என மூன்று பருவங்களாக இருக்கும்.
இதன் வாழ்க்கை சுழற்சி 90 நாள்கள் வரை இருக்கும். தட்பவெட்ப நிலையை பொறுத்து மாறுபடும். இவ்வகை வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வயலை சுற்றியும் புல் மற்றும் களைச்செடிகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெட்டுக்கிளிகள் பெரும்பாலும் முட்டையை வரப்புகளில் இடும் அதனால் வரப்பு பகுதியை 5 சென்டி மீட்டர் ஆழத்திற்கு மண் வெட்டியால் ஆழப்படுத்த வேண்டும்.
வயல்வெளிகளில் மூங்கில் தப்பை அல்லது வேறு மரக் குச்சிகளை கொண்டு பறவை தாங்கிகளை ஏக்கருக்கு 20 இடத்தில் வைத்தால் பறவைகள் வெட்டுக்கிளிகளை இரையாக்கிக் கொள்ளும். விவசாயிகள் வீட்டில் வளர்ப்பு கோழி மற்றும் வாத்துக்களை வயலில் விட்டால் வெட்டுக்கிளிகளை இரையாக்கிக் கொள்ளும்.
தற்சமயம் வெட்டுக்கிளிகள் தீவனப் பயிர்களை அதிகம் தாக்கி வருவதால், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளான அசாடிக்ராக்ஷன் மற்றும் வேப்ப எண்ணெய் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெகுநேரம் செல்போன் பேசிய மாணவி, பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை!