தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் 94.18 கனஅடியாகவும் கபினி அணையில் 75.65 கனஅடியாகவும் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 7 ஆயிரத்து 886 கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 700 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்குவரும் நீர்வரத்து தற்போது 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர்வரத்து 6 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. இன்று ஆயிரத்து 1,500 கனஅடி நீர் உயர்ந்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சீனி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.