தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளை அடுத்து அமைந்துள்ளது போடூர் வனப்பகுதி. இங்கு, தாசம்பட்டி, கோடுபட்டி, துருக்கல், கூத்தப்பாடி மடம், போடூர், செல்லப்பன் நல்லூர், சிலப்பு நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவது வழக்கம். இப்பகுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனங்களான ’ஆலம்பாடி’ மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக அடையாளம் தெரியாத நபர்கள், நாட்டு மாடுகளை மட்டும் குறி வைத்து வேட்டையாடி வருகின்றனர். மாடுகளை வேட்டையாடி இறைச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு, மாட்டின் தோல், கொம்புகளை வனப் பகுதியிலேயே இவர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால் நாட்டு மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வரும் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் 50க்கும் மேற்பட்ட மாடுகளை இந்த அடையாளம் தெரியாத நபர்கள் கொன்று குவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய போடூரை சேர்ந்த மாதையன், “நாங்கள் தலைமுறை தலைமுறையாக போடூர் கோயில் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வருகிறோம். இதுவரையில் மாடுகளை வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறியதில்லை. கரோனா ஊரடங்கு காலத்திலிருந்து வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருக்கும் மாடுகளைக் குறி வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் வேட்டையாடி வருகின்றனர்.
தாகத்திற்கு தண்ணீர் குடிக்க செல்லும் மாடுகளை கொடூரமான முறையில் இவர்கள் மறைந்திருந்து தாக்குவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, மாடுகளின் பின் கால்களை, கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு வெட்டி விடுகின்றனர். பின்னர் மாடுகள் மயங்கியதும் அவற்றின் தலைப்பகுதியை வெட்டிக் கொண்டு செல்கின்றனர்” என வேதனைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சீனாவை பழிக்கு பழி வாங்க வேண்டும்'- சகோதரனை பறிகொடுத்த இளம்பெண் கண்ணீர்!