தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நிலமற்ற மலைவாழ் மக்கள் பெங்களூரு, ஓசூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கட்டிட வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
பல தலைமுறைகளாக, அடர்ந்த மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் இந்த மூன்று கிராம மக்களும் உயர் கல்வி, அத்தியாவசியத் தேவைகள், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மலையை விட்டு கீழே இறங்கி வருவதற்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் தலைமுடியைப் பிடித்து பெண்கள் சண்டை.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
இந்நிலையில், அலகட்டு கிராமத்தைச் சேர்ந்த சித்தபெலான் (75) என்ற முதியவர், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக, முதியவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, வீட்டிற்கு வந்த முதியவர், பாம்பு கடித்ததை தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மூங்கிலில் போர்வையால் தூளி கட்டி, பாம்பின் விஷம் உடலில் பரவாமல் இருக்க பாம்பு கடித்த இடத்தில் சுண்ணாம்பு வைத்து, அவரை தூக்கிக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, மலை இறங்கிய பிறகு, அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றூள்ளனர். சாலை வசதி வேண்டி பல வருடங்களாக மலைவாழ் மக்கள் போராடி வரும் நிலையில், இன்னும் சாலை வசதி கிடைக்காமல், அவசர காலங்களில் மருத்துவ சேவைக்குச் செல்ல தூளி கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை நீடித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2ஆம் நாள்; வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா!