தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பன்னிஹள்ளியில் குமாரசெட்டிஏரி உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் காப்புக்காடு பகுதிகளில் பெய்யும் மழையால் ஏரி நிரம்பி வழியும். 2003ஆம் ஆண்டு ஏரி உடைப்பு ஏற்பட்டு, ஏரி மதகு, ஏரி கரை பழுதாகி மழைநீர் வீணாக சின்னாற்றில் கலந்தது.
இதனால் பன்னிஹள்ளி, அகரம், மாரண்டஹள்ளி, வேளாங்காடு, சாஸ்திரமுட்லு, சந்திராபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் இதுநாள் வரை வறட்சியின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். இப்பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், காய்கறி, பூக்கள் என சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஏரிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. மதகு, கரையை கடந்த 18 ஆண்டுகளாக சரி செய்யாத பொதுப்பணித்துறை அலுவலர்களின் அலட்சியப்போக்கை கண்டிக்கும் வகையிலும், குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரிய ஏரிகளுக்கு கால்வாய், மதகுகளை சீரமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வலியுறுத்தி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் மூன்று மாதத்திற்குள் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.