தர்மபுரி: மேற்கு மாவட்ட திமுக சார்பில் காரிமங்கலத்தில் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நேற்று (டிச. 22) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது பேசிய ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி இருந்த மேடையிலேயே திமுகவை வழிநடத்த கூடிய தலைவர் ஸ்டாலின் தான். எனவே கருணாநிதி மறைவிற்கு பிறகு ஸ்டாலின் தலைவர் ஆனார். அதனால்தான் கட்சி இன்று வரை நன்றாக இருக்கிறது. அவர் வந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் வெற்றி கிடைத்துள்ளது என்றார்.
திமுகவை பார்த்து வாரிசு அரசியல் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். எம்ஜிஆருக்கு பிறகு யார் முதலமைச்சர் ஆனார் ஜானகி. ஜானகிக்கு பிறகு ஜெயலலிதா. இதில் ஜெயலலிதாவிற்கும் எம்ஜிஆருக்கும் என்ன உறவு என்பது அவர்களே முடிவு பண்ணட்டும். ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வந்தார். ஆனால் பாஜகவின் சூழ்ச்சியால் சசிகலா முதலமைச்சராக முடியவில்லை என தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒருமனதாக சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஆளுநர் தமிழகத்திற்கே வரவில்லை. அன்று சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டதால், சசிகலாவால் முதலமைச்சராக முடியவில்லை. சசிகலாவை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தபொழுது அவர் குற்றவாளி அல்ல. ஆனால் சட்டமன்றக் குழு தலைவராக கடிதம் கொடுத்து, ஒரு வாரக் காலத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வந்தது என கூறினார்.
இந்த நிலையில் திமுகவை பார்த்து வாரிசு அரசியல் என பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று பரப்புரை செய்தவர். உதயநிதி ஸ்டாலின் கால் வைத்தவுடன், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மேல், வெற்றி தான் திமுகவிற்கு கிடைத்தது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரே ஒரு செங்கல்லை வைத்து, அதிமுக ஆட்சியை கவிழ்த்து, திமுக ஆட்சியை பிடிக்க வைத்தவர் உதயநிதி ஸ்டாலின் என்றார்.
யார் மீதும் தான் வழக்கு தொடுத்தால், அவர்கள் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதாவும், இப்போது எடப்பாடியும் மாட்டினர். இன்னும், மூன்று மணிகளும் (வேலுமணி, தங்கமணி, வீரமணி) இருக்கிறார்கள். தை மாதத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்; திமுக நிர்வாகிகள் மீது வழக்கு