தர்மபுரி: கடந்த 1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறை, வருவாய்துறை, காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
மலைவாழ் மக்கள், 90 பெண்கள் உட்பட 133 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவத்தின் போது 18 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகள் உடமைகள் சூறையாடப்பட்டதாகவும் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறையை சேர்ந்த 269 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டின் போது உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்பினை உறுதி செய்தது. அடுத்த மேல்முறையீட்டிலும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பினை உறுதி செய்து 6 வாரங்களில் 269 பேரும் சரணடைய உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் மாவட்ட வன அலுவலர் நாதன் (வயது 70) தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிபதி பொறுப்பு மோனிகா, அரசு வழக்கறிஞர் ரமேஷ்பாபு முன்னிலையில் சரணடைந்தார். சரணடைந்த முதன்மை வனக்காப்பாளர் நாதனை, வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தருமபுரியில் பாம்பு கடித்த முதியவரை சாலை வசதி இல்லாததால் தூளி கட்டி கொண்டு சென்ற கிராமத்தினர்!