தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மணி ஆகியோரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி நான்கு ரோடு அரியகுளம் மற்றும் திப்பம்பட்டி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுகவின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் வில்லன். இப்போது இந்தியாவின் வில்லன் நரேந்திர மோடிதான். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் மோடியின் கைக்கூலிகள்.
அன்புமணி ராமதாஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தருமபுரி தொகுதியில் வீடு எடுத்து தங்குவதாக தெரிவித்துவிட்டு, வெற்றி பெற்றவுடன் அவர் தருமபுரியில் தங்கவில்லை. நாடாளுமன்றத்திற்கும் குறைந்த நாட்களே சென்று உள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்வி கூட தருமபுரி மாவட்ட மக்களுக்கான கேள்வியாக இல்லை. மாற்றம் முன்னேற்றம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறிவந்த அன்புமணி, தற்போது ஏமாற்றம்.. தடுமாற்றம்.. சூட்கேஸ் மணி என்றாகிவிட்டார், என்றார்.