தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதி சீரியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்பதி சவுதாமணி, முனிராஜ். இவர்களுடைய மகன் சபரி என்பவருக்கும் வாணியம்பாடி நெக்குந்தி பகுதியைச் சேர்ந்த நித்யாஸ்ரீ என்ற பெண்ணுக்கும், கடந்த ஜூன் 24ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மருமகள் வீட்டிற்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்காக, சவுதாமணி, முனிராஜ் தம்பதியின் மகன் சபரி, ஆறு வயதுடைய பேரன் உட்பட நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் பாலக் கோடு பகுதி சீரியம்பட்டியில் இருந்து, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூர்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் வந்த சவுதா மணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அவரது கணவன், மகன் சபரி, ஆறு வயது பேரன் உட்பட மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பலூர் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.