தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இருவர் பாலியல் சீண்டல்கள் செய்ததாகவும், பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கு கைப்பேசி மூலம் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளி மாணவிகளின் பெற்றோரும், ஊர் பொதுமக்களும் இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
தலைமையாசிரியர் பார்வை திறன் குன்றியவர் என்பதால் அவா் ஆசிரியா்கள் நடத்தை பற்றி கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சமூக அறிவியல் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்னமுத்து ஆகிய இருவரை பிடித்து அடித்து உதைத்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உயிருள்ள புறாவை சாப்பிட்ட பெண் - சோக பின்னணி!
இந்த ஆசிரியர்கள் தினமும் குடித்துவிட்டு பள்ளியில் பாடம் நடத்துவதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்த போது கூட ஆசிரியர் மது போதையில் இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற ஆசிரியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், பெற்றோரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.